Tuesday, March 25, 2008

அமெரிக்க மக்களிடம் இந்து மத நம்பிக்கைகள்

அமெரிக்க மக்களிடம் இந்து மத நம்பிக்கைகள்
The Impact of Hindu Religious Beliefs on Americans....!
Authored by:Albert Fernandoalbertgi@gmail.comWisconsin, USA

TABLE OF CONTENTS
1. முன்னுரை
2. அறிமுகம்
3. இந்துசமயம்
3.1. இந்துமதம்
3.2. இலக்கியத்தில் சமயம்
4. பண்பாடும் விளைவுகளும்
4.1. புலம்பெயர்வு
5. இந்து மத மக்கள்தொகை
5.1. உலகில்
5.2 அமெரிக்காவில்
6. இந்து அமெரிக்கர்கள்
7. அமெரிக்க ஆசிரமங்கள்...!
7.1 அர்ச போதா மையம், நியூஜெர்சி
7.2 குவை இந்து துறவிகள் ஆசிரமம்
7.3 குவை சன்மார்க்க இறைவன் கோவில்
7.4 அனைத்து சமயநம்பிக்கை இருப்பிடத் திருச்சபை (தாம‌ரைக் கோவில்)
7.4.1 உண்மை ஒளிபரப்பும் உலகத் திருவிடம் (புனிதக் கோயில்)
7.4.2 யோக‌ மார்க்க‌ம்
7.5 ஹரே கிருஷ்ணா, ஹரே ராம் இயக்கம்
7.6 இராமகிருஷ்ணா விவேகனந்தா மையம், நியூயார்க்
7.6.1 சுவாமி விவேகனந்தர்
7.7 பார‌தியா கோவில், பென்சில்வேனியா
8. அமெரிக்க‌ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ங்க‌ளில்...
9. முடிவுரை

1. முன்னுரை

செம்மொழித் திட்டத்தில் பக்தி இலக்கிய பன்னாட்டு
கருத்தரங்கம் நடத்த நிதியுதவி கிடைத்திருக்கின்றது,
என்று முனைவர் நண்பர் திரு.நெடுஞ்செழியன் அவர்கள்
எனக்குத் தெரிவித்து, உலகப் பண்பாட்டிற்குத் தமிழ்ப் பக்தி இலக்கியங்கள் / இயக்கங்களின் பங்களிப்பு என்னும்
கருத்தரங்கப் பொருண்மையில் தாங்கள் கட்டுரை
எழுதி அனுப்பலாம், என்றிருந்தார்கள்.

அமெரிக்க மக்களிடம் இந்து மத நம்பிக்கைகள் என்ன
விளைவுகளை(குறிப்பாக பண்பாட்டில்) ஏற்படுத்தியுள்ளது
என்ற‌ க‌டிவாள‌ம் என‌க்கு இட‌ப்ப‌ட்டன. ‌அமெரிக்க
மக்களிடம் இந்து மத நம்பிக்கைகள் என்ன விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்த என்னுரையை கீழ்வரும்தலைப்புக்களில் நிகழ்த்த உள்ளேன்.

1. இவ்வுரைக்கான அறிமுகம் 2. சமயம் 3. பண்பாடும் விளைவுகளும்
4. அமெரிக்காவில் இந்துக்கள் 5. இந்து- அமெரிக்கர்கள்


1. அறிமுகம்

அன்றாடம் மனித வாழ்க்கைப்பிரச்னையில் எத்தனையோ இடர்கள், இன்பங்கள் துன்பங்கள் மாறி மாறி அலைக்கழிக்கிறது. இதன் விளைவு? ஒரு எறும்பு கடித்துவிட்டால் ஆ..அம்மா..என்கிறான். ஒரு சோதனை வந்துவிட்டால் அடக்கடவுளே என்று கடவுளைத் துணைக்கழைக்கிறான். கடவுளே என்னைக் காப்பாற்று! இந்தத் துன்பத்திலிருந்து எப்படியேனும் என்னைக் காத்து இரட்சிப்பாய் இறைவா. இது மனித சுபாவம்! இது இந்துவானாலும் ச‌ரி. இசுலாமிய‌ர் ஆனாலும் ச‌ரி. கிறித்துவ‌ரானாலும் ச‌ரி. இது இய‌ல்பு. ஒரு அனிச்சைச் செய‌லாய் ம‌ன‌தில் எழுந்து அந்த‌ ஒரு க‌ண‌ம்...ஒரு சிறு ம‌ணித்துகளே ஆனாலும் எண்ணுவ‌து அனைவ‌ருடைய‌ இய‌ல்பு!

அனுப‌வ‌ம்; ப‌ட்ட‌றிவு. இதுதான் ஒரும‌னித‌னை ஒன்றின்பால் ஈர்க்கிற‌து. இதில் ந‌ம‌க்கு தீர்வு கிடைக்காதா? இதில் ந‌ம‌க்கு விடிவு கிடைத்துவிடாதா என்று ஏங்கி நிற்கும் ம‌ன‌ம் இருக்கிற‌தே....அது ஒரு கொழுகொம்பு கிடைக்காதா? ப‌ற்றிப்ப‌ட‌ர்வ‌த‌ற்கு என்று அலைபாய்கிற‌து. கிடைத்துவிட்டால் அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சுற்றிச்சுற்றிப் படரும் கொடி போன்று ஒருவர‌டது மனமும் அதனைப் பற்றிப்படர்ந்து கொள்கிறது!

17-ம் நூற்றாண்டிலிருந்து அனுப‌வ‌ம், அறிவு ஆராய்ச்சி என்ற‌ இரு நிலை வாத‌ங்க‌ள் அல‌சி ஆராய‌ப்ப‌ட்டு வ‌ந்திருப்ப‌தை நாம் அறிவோம். அனுப‌வ‌ம் என்ற‌ அறிவாராய்ச்சியில் அய்ரோப்பிய‌ அறிவிய‌லாய‌வாள‌ர் லொக் என்பாரால் தொட‌ங்கிவைக்க‌ப்பெற்று ப‌ல்நிலைக‌ளில் இதுவ‌ள‌ர்ச்சிய‌டைந்த‌து. ம‌ர‌த்தின் கிளைக‌ள் பிரிந்து ம‌ர‌த்துக்கு வ‌லுச் சேர்ப்ப‌துபோல‌ அது ப‌ல்வேறு ப‌ரிணாம‌ங்க‌ளைத் தாங்கி த‌ன்னை விரித்து அத‌்னுள் எழும் அய்ய‌ப்பாடுக‌ளை, அக்குவேறு ஆணிவேறாக‌ அல‌சிப் ப‌ய‌ணித்து புல‌ன‌றிவு வாத‌ங்க‌ளாக‌ ம‌ல‌ர்ந்து புதுச் சிந்த‌னைக‌ள் ம‌ல‌ர‌ வ‌ழிவ‌குத்த‌து!

அறிவின்பால் சிந்த‌னை கிள‌ர்ந்தெழுந்த‌தால் எது நியாய‌ம்? என்ற‌ புரிந்துண‌ர்வை ஏற்ப‌டுத்தி ப‌குத்த‌றிந்து இதுதான் சிற‌ந்த‌து என்ற‌ நியாய‌ உண‌ர்வை ஏற்ப‌டுத்தும் பேருண‌ர்வை வெளிப்ப‌டுத்துவ‌து அறிவு. இந்த‌ அறிவுசார்ந்த‌ விவாத‌த்தை டேக்காட் என்பாரால் தொட‌ங்கிவைக்க‌ப்பெற்று திற‌னாய்வுப் பகுத்த‌றிவுவாத‌மாக‌ வ‌ள‌ர்ச்சிய‌டைந்த‌து என்பார்.

பழங்காலத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலங்களில் அவர்களுக்கே உரித்தான பண்பாட்டுச் சிறப்புக்கூறுகளுடன் அகப் புற கோட்பாடுகளுடன் வாழ்ந்ததை நாமறிவோம். குறிஞ்சியில் வேட்டையாடிய தமிழ் இனம், முல்லையில் வேட்டையில் பிடிபட்ட மிருகங்களை கொல்லாது தமது செல்லப் பிராணிகளாக வளர்த்து கால்நடைகளை மேய்க்கும் இனமாகப் பரிணாமமுற்று, அதன் தொடர் வளர்ச்சியாக நதிக்கரைகளில் நனைந்து நினைந்து நிரந்தரமாக தங்களுக்கான வசிப்பிடத்தை அமைத்து வேளாண்மையில் திளைத்து, பொருள் பெருக்கி அப்பொருட்களைக் காக்க ஒரு தலைவன், ஒரு அமைப்பு, அரசன், கோட்டை கொத்தளம், காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை என்று நிறுவி அரசு என்ற பரிபாலன சபையை ஏற்படுத்தி மருத நாகரிகம் வளர்த்து, பின்னர் பெருகிய செல்வத்தை மேலும் பெருக்க எண்ணி பிறநாட்டோடு தொடர்பு கொண்டு கடல் கடந்து வாணிபம் செய்து நெய்தல் நாகரிகம் வலுப்பெற்றதும் அரசு பேரரசு என்ற தனித் தகுதியோடு வாழ்த் தலைப்பட்டது பழந்தமிழர் வாழ்வியல் பண்பாடு!

இது கி.பி இரண்டாம் நூற்றாண்டில் தொடங்கியது. இன்றுவரை பலவித நவீன மாற்றங்களோடு ப‌ரிணாம‌ வ‌ள‌ர்ச்சியுற்று த‌மிழ‌ர் சென்ற‌ இட‌ங்க‌ளிலெல்லாம் த‌ம் இன‌, மொழி, ம‌த‌ப் ப‌ண்பாட்டுக்கூறுக‌ளைத் தூவின‌ர்!

2. இந்துசமயம்

“இவ்வுலகில் பெரும்பாலான மக்களிடையே சைவ சமயக் கொள்கைகள் பரவி இருந்தன. அவை மிகப் பழங்கால மக்களிடையே பரவி இருந்தன. அவர்கள் தாம் கைக்கொண்ட கிரியைகளின் பொருளை அறியாதிருந்தனர். இதுபற்றியே பழைய கிரேக்கர் உரோமர்களிடையே கடவுட் சிலைகள், பழங்கதைகள் கலப்புக்களும் மாறுபாடுகளும் உண்டாயின. சிவன், சூபிதர், ஓசிரிஸ்" மூன்று கண்களையுடைய சியஸ்(Zeus) ஆக மாறுபட்டார். சிவனின் துணைவியான பவானி, யூனோ, வீனஸ், செபிலி ரோகியா, இரிஸ், செரிங், அண்ணா பெரண்ணா முதலிய தெய்வங்களாக மாறுதலடைந்தார். தெய்வங்கள் பலவானமைக்குக் காரணம் அயல்நாட்டு மக்கள்தாம் கையாண்ட பழங்கதைகளின் தொடக்கத்தையும் திருவடிவங்களின் கருத்துக்களையும் அறிந்திராததினாலேயாகும்.

அவர்கள் தமது நாட்டுப் பழக்கவழக்கங்களுக்கும் ஏற்றவாறு பழங்கதைகளைச் செய்தார்கள். ஆகவே அவர்கள் பழங்கதைகளில் ஒன்றோடு ஒன்று மாறுபடும் மயக்கங்களும் எழுந்தன என்று பாட்டர்சன்(Paterson) அறிவிக்கிறார்.

"ஆரிய வணக்கத்திற்கு எதிராக இருந்தது சிவ வணக்கம். லிங்கக் கடவுளை வழிபடுவோர் எங்கள் கிரியைகளை அணுகாதிருக்கட்டும் என இருக்கு வேதம் சொல்கிறது. இருக்குவேதம் பாம்பு வணகக்த்தையும் கண்டிக்கிறது, என்கிறார் மேல்நாட்டாசிரியரான லில்லி!

சிவனுக்கு இன்னொரு பெயர் பால் ; பாலேசுவரா(ஈசுவரா) என வழங்கும் சிவன் பினீசியரின் பால் என்றும் நம்பினார்.
ஆக தமிழர்கள் தங்கள் மதநம்பிக்கைகளைச்சென்ற விடங்களிலெல்லாம் நீக்கமற விதைத்தனர் என்பதை நம்மால் ஓரளவு கற்பனைசெய்து பார்க்க இயலுகிறது.

அப்ப‌டியான‌ தூவ‌லில் அந்த‌த் தூவ‌லின் தாக்க‌ங்க‌ளில் அமெரிக்க‌ர்கள் சிலர் ஈர்க்க‌ப்ப‌ட்டு த‌மிழ‌ர் க‌லாச்சார‌ங்க‌ளோடு இணைய‌த்த‌லைப்ப‌ட்டுவ‌ருவ‌தை இல்லையென்று எவ‌ரும் ம‌றுத்துவிட‌ இய‌லாது!

3.1. இந்துமதம்

இந்திய மொழிகளில் சமயம் தொடர்பான எந்த நூல்களிலும் இந்துமதம் இதுதான் என்று ஒரு மதத்திற்குப் பெயரிடப்பட்ட சான்று என் கண்களுக்குப் புலப்படவில்லை; மாறாக மேனாட்டார்கள் "ஹிந்து" என்று வழங்கப்பட்ட பெயர் சற்றுத் திரிந்து "இந்து" என வழங்கப்படலாயிற்று என்பது தங்கமுலாம் பூசப்படாத முழு உண்மையாகும்!

மூலத்தைச் சற்று அலசிஆராய்ந்து பார்த்தால் எங்கும் இந்துமதம் என்றொரு மதம் இருந்ததாக எந்த மொழி சார்ந்த சமயவரலாற்றிலும் சொல்லப்படவில்லை, என்பதால் இந்துமதத்தின் தொன்மையைக் கருதி இது சமீபகாலத்தில்தான் இந்தப்பெயரையடைந்தது எனலாம் என்று இந்துப்பண்பாடுகள் சில சிந்தனைகள் என்ற நூலை எழுதியளித்த யாழ்ப்பாணப் பலக்லைக்கழகப் பேராசிரியர் கா.கைலாசநாதக் குருக்கள் தனது நூலில் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
இந்தியாவெங்கும் அந்நாளில் அங்கிங்கெனாதபடி எங்கும் சூரியன், சிவன், விச்ணு, சக்தி, விநாயகர், முருகன் ஆகிய தெய்வங்களை வழிபட்டு வந்ததை அறிய இயலும்! இத்தெய்வங்களுக்கான வழிபாட்டு நெறிமுறைகள் பலவாறாக இருந்தது. காலப்போக்கில் சிந்தனை, அறிவு வளர்ச்சி என்ற ரீதியில் ஒன்றுக்கொன்று அணுக்கமாகி ஒருசில பிரிவுகளாக உருப்பெற்றது. அவை சைவம், வைணவம், சாக்தம்,சவ்ரம், கவ்மாரம், காணபத்யம் ஆகிய பிரிவுகளாகி, இறுதியில் சைவமும் வைணவமும் என்று குறுகி பிற்பாடு அனைத்தும் சைவத்துக்குள் அடக்கம் என்றானது.
3.2. இலக்கியத்தில் சமயம்தமிழ்மொழியை எவ்வாறு தெரிந்துவைத்திருக்கிறோம்? அது சிவனால் அகத்தியனுக்கு உபதேசிக்கப்பட்ட மொழி! அகத்தியன் வழியில் அவர் சீடன் தொல்காப்பியன் இலக்கணம்கண்ட மொழியது. பின் நன்னூலார்! சங்கப்புலவர்கள் வளர்த்த மொழி பின்னால் வள்ளுவர், இளங்கோ, கம்பன் வளர்த்த மொழி செந்தமிழ் மொழி என தெரிந்துவைத்துள்ளோம்! பாண்டியன் தமிழே தமிழ் என்ற பாரம்பரியம் ஒன்றுண்டு! இன்று ஒரு பிரதேசத் தமிழே சிறந்த தமிழ் என்று கூறுவது போல!
சங்க இலக்கியங்கள், அறநூல்கள், பக்தி இலக்கியங்கள், காவியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், இவைதாம் பழந்தமிழ் இலக்கியங்களாகப் பார்க்கிறோம். சமயப்பூசல்கள் காரணமாக சில இலக்கியங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டதுமுண்டு. சைவப்பெருமக்களால் கம்பராமயணமும், சீவகசிந்தாமணியும், நாலாயிர திவ்வியப் பிரபந்தமும் புறக்கணிக்கப்பட்டதுமுண்டு! வைணவப் பெருமக்களால் பெரிய புராணமும் தேவாரத் திருப்பதிகங்களும் புறக்கணிக்கப்பட்டதுண்டு. பொதுநூலான திருக்குறளைச் சமணம், பவுத்தம், சைவம், வைணவம் ஆகிய நான்கு சமயங்களுமே தத்தமது என்று உரிமை கோரிப் போராடியதுமுண்டு!
தமிழரின் மதமாக இந்து மதத்தை தெரிந்து வைத்திருக்கிறோம். அதுவும் சைவமதத்தை தமிழோடு இணைத்து தெரிந்துவைத்துள்ளோம். சைவமும் தமிழும் என்ற சொலவடை மிகப்பிரபல்யமானது! திருவள்ளுவரையும் மூன்று கோடிழுத்து சைவராக்கிய திருவுருவப்படங்களை அறிந்திருக்கிறோம். திரிபுரமெரித்த விரிசடைக்கடவுளும், குன்றமெறிந்த குமரவேளும் இருந்து தமிழ் வளர்த்த சங்கம் என்பது அய்தீகம்.
4. பண்பாடும் விளைவுகளும்
“படிப்பறிவுள்ள பாட்டாளிகளின் கேள்வி” என்ற தலைப்பில் ஜெர்மனிய நாட்டு நாடகாசிரியர் பெட்டோல் பிரச்ட் ஒரு கவிதை வடித்தார். அந்தக் கவிதைச் சிதறிலிலிருந்து சில முத்துக்களை இங்கே சிதற விடுகிறேன்.
ஏழு நுழை வாயில்கள் கொண்ட‌தேபன் நகரைக் கட்டியது யார்? வரலாற்றுப் புத்தகங்களில் உள்ளன.
வேந்த‌னின் பெயர்கள்!வேந்த‌ர்களா சுமந்து வந்தனர்கட்டிட வேலைகளுக்கான‌கற்களை?
சீனப்பெருஞ் சுவர் கட்டி முடித்ததும்மாலையில் எங்கே சென்றனர்கொத்தனார்கள்?
மாவீரன் அலெக்சாண்டர்இந்தியாவை வென்றான்.தனியாளாகவா?
ஒரு சமையல்காரன்கூடவா இல்லைஅவனோடு!
இதிகாசப் புகழ் அட்லாண்டிசைக்கடல் விழுங்கிய இரவில்மரணத்தின் பிடியிலிருந்தோர்அடிமைகளின் உதவியை நாடிக்கூக்குரலிடவில்லையா?
இந்தக் கவிதைச் சர வரிகளை தமிழர்களின்வரலாற்றுக்கும் பண்பாட்டிற்கும் சற்றுப் பொருத்திப்பார்ப்போமா?
தஞ்சை இராஜ இராஜேஸ்வரப் பெரும்கோயிலைக்கட்டியது யார்?
வரலாற்றுப் புத்தகங்களில் உள்ளன.வேந்த‌னின் பெயர் இராஜராஜ சோழன் என்று!
அவ‌னா சும‌ந்து வ‌ந்தான் அந்த‌க்க‌ட்டிட‌ வேலைக‌ளுக்கான‌ க‌ல்லையும் மண்ணையும்?
ம‌துரை மீனாட்சிய‌ம்ம‌ன் கோவில் க‌ட்டிமுடிந்த‌தும் மாலையில் எங்கே சென்ற‌ன‌ர்க‌ட்டிய‌ வேலையாட்க‌ள்?
இராசேந்திர‌ச் சோழ‌ன் இல‌ங்கையைவென்றான். த‌னியாளாக‌வா?
ஒரு ச‌மைய‌ல்கார‌ன்கூட‌வா இல்லைஅவ‌னோடு?இதிகாச‌ப் புக‌ழ் க‌பாட‌புர‌த்தைக்க‌ட‌ல் விழுங்கிய இர‌வில் ம‌ர‌ண‌த்தின் பிடியிலிருந்தோர்அடிமைக‌ளின் உத‌வியை நாடிக் கூக்குர‌லிட‌வில்லையா?
ப‌டிப்ப‌றிவுள்ள‌ பாட்டாளியின் கேள்விக‌ள் மேற்குல‌குக்கு மாத்திர‌ம‌ல்ல‌; கிழ‌க்கிற்கும் பொருந்தும், த‌மிழ்நாட்டுக்கும் பொருந்தும்!இதிலிருந்து தெரிவ‌து என்ன‌? அலெக்சாண்ட‌ரையும் இராஜராஜ‌ சோழ‌னையும் குறித்து வைத்துக் கொண்ட‌ வ‌ர‌லாறு குறிக்க‌த் த‌வ‌றிய‌து அவ‌ர்க‌ள் ப‌டை வீர‌ர்க‌ளையும் ச‌மைய‌ல்கார‌ர்க‌ளையும் நாட்டுக்கு உண‌வ‌ளித்த‌, பொருள‌ளித்த‌ விவ‌சாயிகள்‌, உழைப்பாள‌ர்க‌ளையும் குறிக்க‌த் த‌வ‌றிவிட்ட‌து!
இது என்ன வரலாறு? இது என்ன பண்பாடு? இது அரசரதும் மேட்டிமைகளதும் வரலாறும் பண்பாடும் ஆகும். எமக்குத் தெரிந்தவை இவைதாம்! தெரியாமல் இருப்பவை இலட்சோப இலட்சம் உழைக்கும் மக்களதும், அடிநிலை மக்களது வரலாறும் பண்பாடும்தான்!
பண்பாடு என்பது அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்க நெறிகள், சட்டம்,வழக்கம் போன்றவையும், மனிதன் இந்தக் குமுகாயத்தில் ஓர் உறுப்பினராக இருந்து கற்கும் பிற திறமைகளும் பழக்கங்களும் அடங்கிய முழுத் தொகுதியாகும்" என்றுரைத்தார் எட்வர்ட் பர்னார்ட் டைலர்.குமுகாய‌த்திடமிருந்து ஒரு தனிநபர் பண்பாட்டைக் கற்கும்போது தன் சுய படைப்புத் திறன் மூலம் அறியாமல் கடந்தகாலத்தின் மரபுத்தொடர்ச்சியாக முறைசார் முறைசாராக் கல்விகள் மூலமாக அறிகிறார் என்றுரைப்பார் இராபர்ட் ஹெலூவி.நான் எதற்காக இதைச் சொல்கிறேன்? என்னுடைய தலைப்பிலிருந்து விலகிச் செல்வதாக எண்ணவேண்டாம். இங்கே நான் சுட்ட விரும்புவது இதுதான். கோவையைச் சேர்ந்தவர் அமெரிக்கா சென்று இந்துமதத்தைப் பரப்பினார். அவர் இந்துமதத்தைப் பரப்ப முனைந்ததில் தோல்வியே கண்டார். அமெரிக்கச் சூழலுக்கு ஏற்ப தன் போதனையை வேறு திசையில் திருப்பி வெற்றி கண்டார்.சுப்பிரமுனியசாமி என்ற ஈழத்தமிழர் அமெரிக்காவில் இந்து மதத்தை பரப்ப முனைந்தார். பல்வேறு மாநிலங்களில் சென்று ஆய்ந்தார். அமெரிக்கர்களின் எண்ண அதிர்வுகளைப் புரிந்து அதற்கேற்ற வழிமுறைகளைக் கடைப்பிடித்து அங்கிருந்து தன் பயணத்தைத் துவக்கினார். இன்றைக்கு அது விருட்சமாக வளர்ந்து கிளை பரப்பி நிற்கிறது!
1893-ல் விவேகானந்தர், பாதை யாத்திரையாக ராமேஸ்வரம் வந்த போது ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியை சந்தித்தார். விவேகானந்தரிடம் மிளிர்ந்த புலமை, சாஸ்திர ஞானத்தை கண்டு வியந்த மன்னர் "அமெரிக்கா, சிகாகோ நகரில் நடக்கும் சர்வமத மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற விவேகானந்தரை கேட்டுக்கொண்டார். அதன்படி 1893 மே 31 ல் அமெரிக்கா புறப்பட்ட விவேகானந்தர் நான்கு ஆண்டுகால வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து இலங்கை வழியாக இந்தியா திரும்பினார். யாழ்பாணத்திலிருந்து நீராவிக்கப்பலில் பயணித்து வந்த சுவாமிகள் 1897 ஜன 26 ல் பாம்பன் குந்துகால் துறைமுகம் வந்து சேர்ந்தார். அங்கு தனது பரிவாரங்களுடன் காத்திருந்த மன்னர் பாஸ்கர சேதுபதி,சுவாமி விவேகானந்தரை வரவேற்றார்.
குறிப்புகள் இருக்கிறது. பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் முழுமையாக இல்லை. அமெரிக்காவில் அவரது பல்லாயிரக்கணக்கான சீடர்கள், அவர்களின் குடும்பங்கள், விவேகானந்தருக்குப் பிறகு என்ன ஆனார்கள்? அவரின் உழைப்பு வீணாகப் போயிற்றே?!
இராசேந்திரச் சோழன் இலங்கையை வென்றான். கரிகாற் சோழன் அணையைக் கட்டினான். எப்படி? எந்தப் பொறியாளரைக் கொண்டு? அந்தப் பொறியாளர்கள் எந்தப் பல்கலையில் பயின்றவர்கள்? அவர்களின் அனுபவம் என்ன? இன்றும் கட்டுக் குலையாமல் கல்லாக நிற்கிற கல்லணையின் ரகசியம் என்ன? இதன் குறிப்புகள் என்ன? எந்த ஆவணமும் நமக்கில்லாமல் போனது ஏன்? இன்றைய அறிவியல் வளர்ச்சியில் மருத்துவத்துறை வியக்கத்தக்க சாதனைகள் நிகழ்த்துகிறது! வியந்துபோகிறோம்!
உண்மையில் வியப்பு இதுவா? நம் சித்தர்கள் எந்தப் பல்கலையில் படித்து குற்றுயிரும் குலையுயிருமாய் வந்த பிணியாளர்களை பிணி நீக்கிப் பணி செய்தனரே!? அதுவல்லவா வியப்புச் செய்தி!
சித்தர்கள் செய்யாத அறுவை சிகிச்சையா? மூலிகைகளால் மூர்க்கமான நோயையும் விரட்டி அடிக்கவில்லையா? இதைக் குறித்துவைத்த வரலாறு குறிக்கத் தவறியது அவர்களின் ரகசியங்களை! அதுபோலத்தான் செவிவழிச் செய்தியாக இவர் போனார், அவர் போனார் என்று அறியும் நாம் இவர்கள் தூவிய இந்துமத விதை முளைத்ததா? வளர்ந்ததா? வாழ்ந்ததா? என்று அறியப்படாத பக்கங்கள் பல! அவற்றை வெளிக்கொணர இன்றைக்கு நான் ஒரு கருவியாகச் செயல்பட்டு முழுமையாக இல்லாவிட்டாலும் இயன்றவரை தோண்டித் துருவியுள்ளேன்.
இங்கிருந்து சென்ற நம்மவர்கள் "கொல்லன் தெருவில் ஊசி விற்கப்போகிறோம்" என்பதை அறிந்தே வைத்திருந்தனர். அதனால் "பாடுற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்; ஆடுற மாட்டை ஆடிக்கறக்க‌வேண்டும்" என்ற சொலவடைக்கு இணங்க, “ சென்றார்கள்; வென்றார்கள்" என்றுதான் சொல்ல வேண்டும். எப்படி? பார்க்கத்தானே போகிறோம்; கேட்கத்தானே போகிறோம்!பண்பாட்டு அடையாளமாக உடை, அணிகலன் போன்ற‌ புழங்கு பொருட்கள், கல்வி தத்துவம், மருத்துவம் போன்ற அறிவுத்துறைகள் பயன்படுத்தும் சொற்கள், தொனி முக பாவனை சைகைகள் என்பனவும் கருதப்படுகின்றன. இவற்றுள் ஒரு குமுகாயத்தின் பண்பாட்டின் அடையாளமாக மேற்கிளம்புவன சில! ஒன்று மொழி இரண்டாவ‌து கலை மூன்றாவ‌து இலக்கியம் ஏனையவை சமயம், வாழ்க்கை என்பனவாம்!
இதில் இரண்டாவதைப் பிரதானப்படுத்தி ஏனையவற்றைச் சாதித்தனர்!4.1. புலம்பெயர்வு
பழைய தமிழ் நூல்களில் கடற் பயணங்களைப் பற்றிய செய்திகள் ஏராளமாய்ப் பொதிந்து கிடக்கிறது. மிகப் பழங்காலத்தில் கடற்பயணம் செய்வதில் பேர்போனவர்களாய் தமிழர்கள் இருந்தார்கள் என்பதற்கும் ஆதாரங்கள் வலுவாய் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பாண்டியநாட்டு மக்கள் வரலாற்றுக் காலத்திற்கு முன் தொட்டே கடலோடிகளாக இருந்திருக்கின்றனர்.
துறைமுகப்பட்டினங்களாகத் திகழ்ந்த இடங்களும், ஓடம்,பரிசல், தோணி, தெப்பம், கலம், மரக்கலம், பாய்மரக்கப்பல் என்ற பயன்பாட்டுச் சொற்களும் தமிழன் கடல்கடந்து தொடர்பு கொண்டிருந்திருக்கிறான் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. புற நானூறு, மணிமேகலை போன்ற நூல்கள் இதைக் கோடுகாட்டினாலும் டாக்டர் மாக்லீன் கூற்றுப்படி தென்னிந்தியாவினின்று சென்று உலகின் பலபாகங்களில் பரவினார்கள் என்பதிலிருந்தும் புலம்பெயர்வு என்பது மிகப்பழங்காலத்திலேயே தமிழனால் நடந்திருக்கிறது என்பதை நிச்சயமாகச் சொல்லமுடியும்!
1950களிலிருந்து சிறுகச் சிறுக தமிழகத்திலிருந்து தொழில் வல்லுனர்கள் அமெரிக்காவின் பல இடங்களில் குடியேறத் தலைப்பட்டனர். ஆங்கிலம் கற்ற உயர் தகுதியுடையோருக்கு இருந்த வரவேற்பும், வருவாயும் மாதக்கணக்கில் கடல்வழி பயணப்பட்டு வந்து சேர்ந்திருக்கின்றனர். இவர்கள் குடியேறியபின்னர் தாம் சார்ந்துள்ள நிறுவனங்களில் கீழ்நிலையில் பணி புரிய தொழில் அறிந்தோரை வரவழைத்து இருத்திக்கொள்ளல் என்ற ரீதியில் துவங்கி ஆங்காங்கே தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த அதிகரிப்பு விழுக்காடு 70களில் இன்னும் கூடுதலாகத் துவங்கி 80களில் அமெரிக்க மாகாணங்களில் ஒரு கிராமத்து எண்ணிக்கைபோல ஆங்காங்கே தென்பட்ட அதே நேரத்தில் யாழ்ப்பாணத்திலிருந்தும் கொழும்பிலிருந்தும் ஈழத்தமிழர்களும் சேர்ந்துகொண்டனர். இது 80களில் தொழில் வல்லுனர்கள், உயர்மத்தியதர வர்க்கத்தினர் இக்காலத்தைப்போல் குடிவரவுச் சட்டங்கள் கடுமையனதாக இல்லாதிருந்ததும் தொழில்வாய்ப்புகள் பிரகாசமாய் இருந்ததாலும் மருத்துவர்களாக, பொறியியலாளர்களாக, சட்ட நிபுணர்களாக அவரவர்க்கு ஏதுவானதொரு வேலையில் பற்றிப்படர்ந்தனர்.
நிர்வாகம், முகாமைத்துவம், போர்மேன், இப்படியான பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டதோடு அவர்களது நண்பர்கள் உறவினர்கள் போன்றோரையும் வருவித்துக் கொள்ளத் துவங்கின‌ர்.
புதிதாகக் குடியேறிய இடத்தில் முற்றிலுமாகக் காலூன்றாத நிலையில் இம்முதலாவது தலைமுறை தாங்கள் பிரிந்து வந்த தாய்த் தமிழகத்தைப் பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளில் எண்ணத் தலைப்பட்டவர்களாய் ஏக்கங்கொண்டோராய் இருக்க நேரிடுவதில் வியப்பில்லைதான்!
காலாற நடந்து, இஷ்ட்டப்படி சைக்கிளைமிதித்து நாலுதெரு சுற்றி வந்து, கட்டிய லுங்கியோடு தெருவோரக் கடைக்கு சென்று வருவது, குடும்பத்தோடு பக்திமணம் கமழ கோவிலுக்குச் சென்று வெளியே சொல்ல முடியாத சில பல சங்கதிகளை இறக்கிவைத்து சுமை இறங்கிய சந்தோசத்தில் இல்லம் திரும்புவது இவையெல்லாம் பழம் நினைவுகளாய், கனவுகளாய் கண்களுக்குள் மட்டுமே கருக்கொண்ட சமாச்சாரங்களாகிப் போன ஏக்கங்களைத் தீர்க்க என்ன வழி? குருத்தெலும்பை ஊடுருவி சில்லிடவைக்கும் பனிக்காலக் குளிர், இல்ல‌த்தை விட்டு காரில் ஏறி உட்கார்ந்தால் ப‌ணியிட‌ம், ப‌ணியிட‌த்தை விட்டால் இல்ல‌ம்..என்று சோர்ந்து போன‌ நேர‌ங்க‌ளில்தான்ஸஸ.இவர்களுக்கான சுயதேவைகள், கலாச்சாரச் செயற்பாடுகள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் அடுத்த கட்ட முயற்சிகளில் இறங்கினர்.
தமிழர் என்ற வட்டத்தை இந்தியாவிலிருந்து பலபாகங்களிலிருந்து வந்த இந்தியர்களோடு இணைந்து தங்களின் வழிபாட்டுக்கு ஒரு பொது இடத்தைத் தேர்வு செய்து சிவன், விஷ்ணு, முருகன், பிள்ளையார் என்று பல தெய்வங்களை ஓரிடத்தில் வழிபடும் நிலையை உருவாக்கினர்.
சிலர் வேதாந்திகள், ரிஷிகள், சுவாமிஜிக்களை வட இந்தியாவிலிருந்து தருவித்து உபண்யாசங்கள், சடங்கு சம்பிரதாயங்களைச் செய்வதைக் கண்ணுற்ற நம்மவர்கள் தங்களுக்கான கலாச்சார பண்பாடுகளுக்கான வேலியை அமைக்கத் துவங்கினர். இன்றைய நிலையில் இது அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் இந்துக்கோவில்கள் என்ற நிலையையும் சிறு நகரங்களில்கூட வழிபாட்டுத்தலங்களை ஏற்படுத்தி வழிபடுகின்றனர்.
“இந்துக்களல்லாதவர்கள் இந்தக் கோவிலுக்குள் நுழைய தடை” என்ற அறிவிப்புக்கள் ஏதும் இல்லாத‌ காரணத்தால் கோவில்களில் நெற்றியில் குங்குமத்தோடோ திருநீரோடோ அமெரிக்க முகங்களையும் சேர்ந்தே தரிசிக்க முடிகிறது.
இப்படித்தான் புலம்பெயர்ந்த தமிழர்களால் அவர்கள் கடைப்பிடிக்கும் பண்பாடு இன்றைக்கு அமெரிக்காவில் அதன் குமுகாயத்தினரால் (சமூகத்தினரால்) ஈர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சொலவடை உண்டு. "கோவில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்". இன்றைக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒவ்வொருநாட்டிலும் தங்கள் தராதரத்திற்கேற்ப கோவில்களை நிர்மானித்து குடமுழுக்குச் செய்து தங்கள் பண்பாட்டிலிருந்து நழுவிவிடாமல், வழுவிவிடாமல் தங்கள் இல்வாழ்க்கையைச் சிறப்பித்து வருகின்றார்கள். இது அமெரிக்காவிலும் அமரிக்கையாய் தொடர்கிறது. இன்னும் சொல்லப்போனால் தாய்த் தமிழகத்தில்கூட இப்படிப்பட்ட கோவில்கள் சுற்றுப்புறச் சூழல்கள் இல்லை என்று அடித்துச் சொல்கின்ற அப்பழுக்கற்ற நடைமுறையில் கோவில்களை நிர்மானித்து வழிபட்டுவருகின்றனர்.
இந்து என்றால் சைவம் என்பர்; இந்தச் சைவ நடைமுறைகளை தூரநின்று என்ன நடக்கிறது அங்கே என்று பார்த்தவர்கள் அவர்களின் நண்பர்களினூடாக இந்துக்கோவில்களுக்குச் செல்ல தலைப்பட்டனர். அவ்வாறு சென்றவர்களைக் கவர்ந்தது என்ன? ஈர்த்தது என்ன?
பொதுவாக இறைவழிபாட்டில் இறைவனிடம் வேண்டுவது என்ன? என் குறை தீர்க்கவேண்டும்! என் இன்னல்கள் களையப்படவேண்டும்; இதை உன் காலடியில் வைத்துவிட்டேன் நீதான் எனக்கு. எனக்கு வேறுயார்? என்று முறையிடும் உள்ளங்கள் ஒருபுறம்! இறைவா உன்னையே நம்பி வந்த என்னைக் கைவிடவில்லை. நான் முன்னரே வேண்டியபடி எனக்கு நிறைவேறினால் இதை உனக்கு காணிக்கையாகச் செலுத்துகிறேன் என்று உன் முன் சொன்ன சத்தியப்பிரமாணத்தின்படி இதோ என் காணிக்கை! என்ற நிறைவேற்றுதல்கள் ஒருபுறம்!இதனை அவதானிக்கிற அமெரிக்கர்கள் மெல்லமெல்ல ஓ! இதுதான் இந்துப் பண்பாடு! இந்தப் பண்பாடு நமக்கும் ஏற்றதே என்று எண்ணவைக்கிறது. தங்களையும் ஒரு இந்துவாக..இந்துவாக்கிக்கொள்ள என்ன செய்வது? என்ற சிந்தனை சீறிக்கிளம்ப இப்போது ஆங்காங்கே இந்துக் கோவில்களில் அமெரிக்கர்கள்!
5. இந்து மத மக்கள் தொகை5.1. உலகில்ஸ
உலகின் மூன்றாவது மிகப்பெரிய மதமாக இந்துமதம்! 837 மில்லியன் இந்துக்கள் உலகெங்கும் இருப்பதாக அறிவிக்கும் புள்ளிவிபரம், உலகமக்கள் தொகையில் 13விழுக்காடு என்பதை அதிர்ந்து சொல்கிறது!உலக கிறித்தவ‌ தகவல் களஞ்சியம் எடுத்த மெகா ஆய்விலிந்ததகவல் உள்ளது. குளோபல் கிறிஸ்டியானிட்டி என்ற உலகளாவிய அமைப்பின் புள்ளிவிபரப்படி 2007ம் ஆண்டின் மத்தியில் எடுத்த கணக்கெடுப்புப்படி உலகெங்கும் உள்ள இந்துக்களின் எண்ணிக்கை 88,83,00,000 பேர்கள் என்கிறது! இதுவே 2025ல் 107கோடியே 76 இலட்சங்களாக இருக்கும் என்றும் கணித்துள்ளது!
5.2 அமெரிக்காவில்ஸ.
அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்புக் கழகத்தின் 1990ல் 2,27,000 இந்துக்கள் என்ற விகிதம் வேர்ல்ட் அல்மானாக்12,85,000 இந்துக்கள் என்றும் (1999ல் அமெரிக்கன்-கனடியன் ஆலயங்கள் வருடாந்திர மலர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதை அடிப்படையாகக்கொண்டு) 2000ல்பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் 10,32,000 இந்துக்கள் என்றும், 2001ல் அமெரிக்காவில் 7,66,000 இருப்பதாக குறிக்கிறது. இதுவே கனிசமாக உயர்ந்து,வளர்ந்து வருவதை புள்ளிவிபரங்கள் வெளிச்சமிடுகிறது!. அமெரிக்க ம‌த‌ங்க‌ள் குறித்த‌ ஓர் ஆய்வை 2001ல் நியூயார்க் ந‌க‌ர‌ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தின் மூல‌ம் நிக‌ழ்த்திய‌து. இது தொலைபேசி மூல‌ம் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ ஆய்வு ஆகும்! 50,281 இந்து இல்ல‌ங்க‌ளில் இந்த ஆய்வு ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌து. அமெரிக்க‌ ம‌க்க‌ள் தொகையில் 0.4% விழுக்காடான‌ 1.2 மில்லிய‌ன் பேர்க‌ள் இந்துக்க‌ள் என்ற‌ ஆய்வு முடிவை இந்த‌ த‌னியார் ஆய்வு நிறுவ‌ன‌ம் அறிவித்துள்ள‌து.
1990க‌ளில் இருந்த‌ இந்துக்க‌ள் இன்றைக்கு மூன்று ம‌ட‌ங்காக‌ப் பெருகியுள்ள‌ன‌ர் என்ப‌தும் இந்த‌ ஆய்வு வெளியிட்டுள்ள‌ த‌க‌வ‌லாகும்!
2004ல், ஹார்வ‌ர்டு ஆய்வு நிறுவ‌ன‌ம் 13,00,000இந்துக்கள் என்றும் 2008ல் இன்றைய தேதியில் 22,90,000 பேர்கள் இந்துக்கள் இருப்பதாகவும் இன்னொரு அமைப்பு தெரிவிக்கிறது.
6. இந்து அமெரிக்கர்கள்ஸ.
இந்துமதப் பண்பாட்டில் இன்றைக்கு அமெரிக்கர்கள் இந்துவாக மாறி வாழ்க்கை நடத்துவோர் ஓரிரு லட்சங்கள் இருக்கும் என்று கருதப்ப‌டுகிறது. மிகச் சரியான புள்ளிவிபரங்கள் கிடைக்கவில்லை.
50 மாநிலங்களிலும் இந்துவாக மாறிய / அதிகாரப் பூர்வமாக மதம் மாறாமல் இந்துவாகவே வாழும் அமெரிக்கர்களைப் பார்க்கலாம். இந்துக்கோவில்களில், திருமணங்கள், பிற‌ இந்து நிகழ்வுகளில் இவர்களையும் சேர்த்தே காணலாம்.சில மாநிலங்களில் இவர்களின் எண்ணிக்கை கூடுதலாகவும் சில இடங்களில் குறைவாகவும் இருப்பர்.
அங்கங்கே இந்து மத ஆசிரமங்கள் இருக்கின்றன. சமீபத்தில் பென்சில்வேனியாவில் உள்ள ஓரு ஆஷ்ரமத்துக்குச் சென்ற என் பேராசிரிய நண்பர், அங்கு இந்து மதத்தைத் தழுவியிருக்கும் அமெரிக்கர்களை அதிகம் காண‌ நேர்ந்ததாகத் தெரிவித்தார்.
இந்துக்கோவில்களுக்குள் செல்ல எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாததால் எந்த அமெரிக்கரும் தனியாகவோ, குடும்பமாகவோ சென்று தரிசித்துவிட்டுப் போகிறார்கள்.
எனக்குத் தெரிந்த அமெரிக்க நண்பர், டாம்! இந்துக்கோவிலுக்குச் செல்பவர். நீங்கள் வழக்கமாகச் செல்லும் கோவிலுக்கும் இங்கும் என்ன வேறுபாட்டைப் பார்க்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே சொன்னார். "இரண்டு" என்று இருவிரலைக் காண்பித்தார். ஒன்று,"பில்" அதாவது பணம் கிறித்தவக் கோவில் எதுவானாலும் அவர்கள் வரிபோல வருடத்துக்கு இவ்வள‌வு என்று செலுத்தவேண்டும்.அது இங்கில்லை! இரண்டாவது, "ஒரு கோவிலில் இருக்க வேண்டிய அமைதியான சூழல், விரும்பிய வரை இருந்து விரும்பிய தெய்வத்திடம் நின்று மனதாரப் பேசிவிட்டு, காலாற எந்தத் தொந்தரவும் இன்றி சிறிது நேரம் அமர்ந்து ஒருவித மோன நிலையில் இருந்துவருவது பிடித்திருக்கிறது" என்றார். அதாவது கிறித்தவக் கோவிலில் ஒரு குறிப்பிட்ட திருப்பலி நடைபெறும் நேரத்துக்கு போக வேண்டும். அந்தத் திருப்பலியில் அமர்தல், எழுதல்,முழந்தாளிடுதல் என்று மாற்றிமாற்றிச் செய்துவிட்டு அந்த திருப்பலி முடிந்தவுடன் தொடர்பான சில பணிகள்..இப்படியாக இருக்கும்! அது போன்ற கட்டுப்பாடுகள் இல்லை இந்துக்கோவில்களில். தவிரவும் இந்தக் கலாச்சாரம் பண்பாடுகள் குடும்ப வாழ்வோடு ஒத்துப்போக இயைந்ததாக இருப்பதாகவும், நான் அமெரிக்கன் ஆனால் இந்து என்று தெரிவித்தார். 7. அமெரிக்க ஆசிரமங்கள்...!
7.1 அர்ச போதா மையம், நியூஜெர்சி
ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற சொலவடை நாமறிந்தது. அதுபோல அமெரிக்காவில் இந்துப் பண்பாட்டில் ஊறிய அமெரிக்கர்கள் அதிகம் காணப்ப‌டக்கூடிய ஒரு சில இடங்களை படங்களுடன் விவரிக்க விரும்புகிறேன். இதன் மூலம் ஒரு தெளிவான காட்சியை உங்கள் கண்களுக்குள் திரையிட விரும்புகிறேன்.
முதலில் நியூயார்க் அருகேயுள்ள நியூஜெர்சி சாமர்செட் "அர்ச போதா மையம்" அழைத்துச் செல்லுகிறேன். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பளவில் இயற்கை எழில் சூழ்ந்த நந்தவனம் இந்த மையம்!
இந்த ஆசிரமம் பழமையான இந்தியக் கோவில் ஒன்றை நினைவில் நிறுத்தும் வண்ணம் அமைந்த கோவில், மிக நேர்த்தியான பிரசங்க மண்டபம் மற்றும் தங்குமிடங்களை உள்ளடக்கிய மிக அமைதியான பிரம்மிப்பான இடம்!

இங்குள்ள கோவிலில் குருக்களாக இருப்பவர்கள் கோவையைச் சேர்ந்தவரும் கும்பகோணம் வேதபாடசாலையில் பயின்றவருமான கணேசன் குருக்கள் மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த மஞ்சக்குடி குருக்கள் ரவிச்சந்திரன் அவர்களும் பணியாற்றுகின்றனர்.



கோவிலின் உட்புறம்ஸ..




ஆன்மீகக் கருத்துக்களில் மூழ்கியுள்ள அமெரிக்க இந்துக்கள்
சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகள் நிறுவிய இந்த ஆசிரம மையத்தை தற்போது நிர்வகித்து வருபவர் தட்வவிதானந்தாஜி சுவாமிகள்.
இங்கு வேதாந்தம், பகவத் கீதா, தியானம், யோகா, சமஸ்கிருதம் உட்பட பல்வேறு ஆன்மீகம் தொடர்பான நடைமுறைகள் போதிக்கப்படுகிறது.
7.2 குவை இந்து துறவிகள் ஆசிரமம்
அமெரிக்காவின் அதிமுக்கிய சுற்றுலா கேந்திரமான ஹவாய் தீவுகளில் கப்பா எனுமிடத்தில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ள ஆசிரமம் இந்த துறவிகள் ஆசிரமம். இந்த ஆசிரமத்தை நிறுவியவர் ஒரு ஈழத்தமிழர் சுப்ரமுனியசுவாமி.1970-களில் இவர் நிறுவி இன்று ஆல மரமாய்ப் படர்ந்து பரவி நிற்கிறது.
சுப்ரமுனியசுவாமி ஐ.நா.சபையின் உயர்ந்த விருதான சமாதானத்துக்கான விருதைப் பெற்றவர். (தலாய்லாமா, நெல்சன் மண்டேலா, மிக்கேல் கோர்பச்சேவ்,போப் ஜான் பால்11 மற்றும் அன்னை தெரசா ஆகியோருக்கு அடுத்தபடியாக இவருக்கு இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 2001-ல் இவர் மறைந்தபோது அமெரிக்க இந்து துறவியான‌ சத்குரு போதிநாத வெய்லன் சுவாமிகள் பொறுப்பேற்றுக்கொண்டார்.
7.3 குவை சன்மார்க்க இறைவன் கோவில்
அமெரிக்காவின் புனித யாத்திரைத் தலமாகவும் சிறீ.ஸ்படிக லிங்கேசுவரர் திருக்கோயிலும் இங்குள்ளது! உலகிலேயே சிவ நடராஜரை மூல மூர்த்தியாகக் கொண்ட இக்கோயிலே முதலாவது சிவன் கோவிலாகும்! இக்கோயிலில்தான் சிவனின்










108 தாண்டவ மூர்த்திகளும் பிரதிஷ்டை செய்யபப்ப‌ட்டு 16 டன் எடையுள்ள மிகப்பெரிய நந்தியை உடைய இக்கோவிலின் எட்டுகாலப் பூசைகளையும் ஆதீனத்துத் துறவிகள் செய்து
வருகின்றனர்.
இந்த சன்மார்க்க இறைவன் கோவிலில் ஆகம வழிபாடுகளை ஒருகுறைவுமில்லாமல் செய்துவருபவர்கள் பரமாச்சாரியார் பழனிசுவாமி, பரமாச்சாரியார் சீயான்சுவாமி,குமாரசுவாமி, முருகானந்தசுவாமி, ஆறுமுகசுவாமி, சிவகதிர்சுவாமி, சண்முகானந்தசுவாமி, சரவணானந்தசுவாமி, யோகிநாதசுவாமி, செந்தில்நாதசுவாமி, ஜோதிநாதன், ஹரனாநந்திநாதா ஆதிநாதா நீலகந்தன்,தேவநாதன், தண்டபானி, சத்யநாதன், ஜீவனந்தநாதன் உட்பட 19 துறவிகள் இருக்கின்றனர்.இத்துணை தமிழ் துறவியரா? வியப்பால் உங்கள் புருவம் உயர்வது எனக்குத் தெரிகிறது!
அதுதான் இல்லை. மூன்று த‌மிழ‌ர் உட்ப‌ட‌, அமெரிக்கா ம‌ற்றும் 6 வெளிநாடுகளைச் சார்ந்த அமெரிக்கர்கள் முறையாக 12 வருடங்கள் குரு குலக் கல்வி கற்று சன்னியாசி தீட்சை பெற்றவ ர்கள்!

பழனிசுவாமி சீயான்சுவாமி

குமாரசுவாமி முருகானந்தசுவாமி

ஆறுமுகசுவாமி சிவகதிர்சுவாமி

சண்முகானந்தசுவாமி சரவணானந்தசுவாமி

யோகிநாதசுவாமி செந்தில்நாதசுவாமி

ஜோதிநாதன் ஹரனாநந்திநாதா

ஆதிநாதா நீலகந்தன்

தேவநாதன் தண்டபானி

சத்யநாதன் ஜீவனந்தநாதன்
7.4 அனைத்து சமயநம்பிக்கை இருப்பிடத் திருச்சபை (தாம‌ரைக் கோவில்)
7.4.1 உண்மை ஒளிபரப்பும் உலகத் திருவிடம் (புனிதக் கோயில்)

அனைத்து இறை நம்பிக்கை-யாளர்களுக்கும் புகழிடமாக "தாமரை" ஆலயம் நம் கோவைத் தமிழர் சச்சிதானந்த சுவாமிகள் விர்ஜினியா, பக்கிங்காமில் அமைத்து இந்துப்பண்பாட்டை எல்லாருக்குமான பொதுப்பண்பாடாக 1986ல் நிறுவினார்.
சச்சிதானந்த சுவாமிகள் அமெரிக்கர்களின் மன ஓட்டத்தை எண்ண அதிர்வுகளை அறிந்து வைத்திருந்த காரணத்தால் ச்சிதானந்தர் குருதேவர் சச்சிதானந்த சுவாமிகளானார்! 1960களில் இசையிலும் கலையார்வமும் இருப்பதை அறிந்து அவர்களின் எண்ணங்களுக்கு 1969ல் ஒரு வடிகால் ஏற்படுத்தினார்.
"உண்மை ஒன்று அதை அடைய பாதைகள் பல" என்பதுதான் அவரின் தாரக மந்திரம்! இந்த மந்திரசொல்தான் அமெரிக்கர்களைக் கவர்ந்தது. சன்மார்க்க சித்தாந்தச் சிந்தனைகள அழகுறப் பொழிந்தார்! இந்தச் சொற்பொழிவு மழையில் நனைந்த ஆமெரிக்கர்கள் எப்போதும் மகிழ்ச்சியில் திளைத்திரு, சமாதான வாழ்வு வாழ், உன்னை நீஅறிந்துகொள், நலமுடன் வளமாய் வாழு, உலகுக்கு சமாதானத்தை அளி, உனக்கு குரு யார்? என்றும் உங்களோடு நான்.... இதுதான் அமெரிக்கர்களுக்கு புத்துணர்ச்சியூட்டிய வாசகங்கள்! அவர்களுக்குள் பூபாளம் பாடிய புத்திசை!
எனது என்ற சுயநலமும் நான் என்ற அகங்காரமும் நம்மைஅழித்துவிடும். இவற்றைத் துறந்து நாம் என்ற பொதுநலமும் நாங்கள் என்ற அன்புப் பிணைப்பும் கொண்டு எல்லோருடனும் சுயநலமற்ற சிந்தனையோடு செயல்பட்டால் நாமும் வாழ்ந்து நம்மைச் சார்ந்திருக்கும் மற்றோரையும் வாழ வைக்கலாம்.
வேறு வேறாகிய புற நெறிகள் எல்லாம் மனிதனை மறைத்து விடுகின்றன. அருளொடு உன்னின்று உதிக்கும் இந்த அருள் ஆன்ம‌ நெறி ஒன்றே மனிதனை அவ்வருள் வடிவாக மாற்றி அழிவின்றி வாழச் செய்வதாம்.
கடவுள் ஒருவரே; அவர் ஒளிவடிவினர். அவரை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்க. சிறு தெய்வ வழிபாடு கூடாது; உயிர்ப்பலியிடுதலும் விலக்குக. சாதி, சமய, மத, இன, மொழி, நாடு பாகுபாடுகள் அனுசரித்தல் வேண்டாம். எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் எண்ணும் ஆன்ம நேய ஒருமைப் பாட்டுரிமையைக் கைக்கொள்க.
துன்புறும் உயிர்களுக்கு உதவுவதே இறைவழிபாடு. உயிர் இரக்கம் ஒன்றே இறைவனின் பேரருளைப் பெற வழிகோலும். பசித்தோரின் பசியாற்றுதல் என்னும் ஜீவகாருண்யமே பேரின்ப வீட்டின் திறவுகோல். வ‌ள்ள‌லாரின் வைரவரிகளை ச‌ச்சிதான‌ந்த‌ர் த‌ங்க‌முலாம் பூசிய‌ வார்த்தைச் சர‌ங்க‌ளாக‌த் தூவிய‌போது ஆயிர‌க்க‌ண‌க்கண‌க்கான‌ அமெரிக்க‌ர்க‌ள் ச‌ச்சிதான‌ந்த‌ர் சென்ற‌விட‌மெலாம் கூடின‌ர்.
1969ல் நியூயார்க் அருகே அமெரிக்கர்களின் இசையார்வத்துக்கும், கலையார்வத்தையும் ஒன்றிணைத்து 4நாட்கள் "வுட்ஸ்டாக் திருவிழாவை துவக்கினார். நியூயார்க் 17ம் சாலை போக்குவரத்து ஸ்தம்பித்தது. வரலாறுகாணாத அலையா கடலலையா என்பது போல 4 இலட்சத்து 50 ஆயிரம் பேர்கள் அமெரிக்கா முழுவதிலுமிருந்து குவிந்தனர். Sri Gurudev opens the Woodstock Festival, 1969.
தாமரை ஆலயம் நாளும் பொழுதும் அமெரிக்கர்கள் வரவால் பிரசித்திபெற்றது; சச்சிதானந்த சுவாமிகளின் சொற்பொழிவுகளில் கட்டுண்டு கிடந்தனர்.
சைவத்தைப் போதித்த சச்சிதானந்தர் சைவ‌ உண‌வே சிற‌ந்த‌து என பிரசங்கிக்க சைவ உணவுக்கு மாறிய அமெரிக்கர்களுக்கு சைவ உணவே அளித்து தம் சமரச சன்மார்க்கம் கண்ட வள்ளலாரைப் போதித்தார்! வாடிய பயிர்களாக இருந்த அமெரிக்கர்கள் சச்சிதானந்தரை வள்ளலாராய்ப் பார்த்தார்கள்!
7.4.2 யோக‌ மார்க்க‌ம்
அமெரிக்கர்கள் இந்துமதப் பண்பாட்டில் மிக விரும்புவது, மிக முக்கியமானது இந்து சமயத்தில் உருவான யோகமார்க்கம். பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரத்தை போதித்தார். யோகா வாழ்க்கையில் யோக‌ம் கொண்டுவ‌ரும் என்றார். யோகா ப‌யிற்சி அளித்து ஆசிரிய‌ர்க‌ளை உருவாக்கி அவ‌ர்க‌ள் மூல‌ம் யோகா வ‌குப்புக‌ள், ஆன்மீக‌ ப‌யிற்சி வ‌குப்புக‌ள், ஆலோச‌னை மைய‌ம் என்று நாள் முழுக்க‌ இய‌ங்கும் கூட‌மாக திக‌ழ்ந்த‌து தாம‌ரை.
அன்பு, ச‌மாதான‌ம், ந‌ல‌வாழ்வு, வ‌ள‌வாழ்வு, உள‌வாழ்வு என்று ந‌ற்சிந்த‌னைக‌ளை விதைத்த‌ இவ‌ருக்கு அமெரிக்காவில் ம‌ட்டுமில்லை உலக நாடுகள் விருது வ‌ழ‌ங்கி பாராட்டி ம‌கிழ்ந்த‌து. குறிப்பாக‌ 1996லும் 2002லும் அமெரிக்க‌ ஐக்கிய‌ நாடுக‌ள் ச‌பை விருது வ‌ழ‌ங்கிச் சிற‌ப்பித்த‌து.‌
இன்றைக்கு சச்சிதானந்தர் மறைவுக்குப் பின்னாலும் அமெரிக்காவில் இவ‌ருடைய‌ சீட‌ர்க‌ள், அடியொற்றி ந‌ட‌க்கும் அமெரிக்க‌ர்க‌ள் ப‌ல்லாயிர‌ம்பேர்க‌ள் ம‌த‌மாற்ற‌ம் செய்யாத‌ இந்துக்க‌ளாக‌வே இருக்கின்ற‌ன‌ர் என்ப‌து குறிப்பிட‌த் த‌க‌க்து.
1999-ல் ச‌ச்சிதான‌ந்த‌ரை அப்போதைய‌ அதிப‌ர் பில் கிளிண்ட‌னும் அவ‌ர‌து ம‌னைவி ஹிலாரியும் த‌ங்க‌ள் ஞான‌க் குழ‌ந்தையோடு ச‌ந்தித்து ஆசி பெறுகின்ற‌ன‌ர்
1990ல் பொதுவழிபாட்டுக்கூடத்தை முதல்வர் கலைஞர் துவக்கிவைக்கும்போது
ச‌ச்சிதான‌ந்த‌ரை த‌ரிசிக்க‌ அமெரிக்கா வ‌ந்த‌ ந‌டிக‌ர் ர‌ஜினிகாந்த்!
இன்றைக்கு சச்சிதானந்தர் மறைவுக்குப் பின்னாலும் அமெரிக்காவில் இவ‌ருடைய‌ சீட‌ர்க‌ள், அடியொற்றி ந‌ட‌க்கும் அமெரிக்க‌ர்க‌ள் ப‌ல்லாயிர‌ம்பேர்க‌ள் ம‌த‌மாற்ற‌ம் செய்யாத‌ இந்துக்க‌ளாக‌வே இருக்கின்ற‌ன‌ர் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.


இந்துப்பண்பாடுகளில் திளைத்துள்ள அமெரிக்கர்கள் இசையோடு திறந்தவெளியில் அமெரிக்க இந்து துறவிகளோடு மகிழ்ச்சித் தருணங்களில் மூழ்கிக்கிடக்கும் பொன் பொழுதுகள் இவை!
7.5 ஹரே கிருஷ்ணா, ஹரே ராம் இயக்கம்
ஹ‌ரே கிருஷ்ணா ஹ‌ரே ராம் இய‌க்க‌ம்1966ல் நியூயார்க்கில் துவ‌க்க‌ப்ப‌ட்ட‌து. ஹரே ராம் ஹரே கிருஷ்ணா இயக்கம் அமெரிக்காவில் அங்கிங்கெனாதபடிவளர்ச்சிபெற்று ஏராளமான அமெரிக்கர்கள் 70களில் இந்துவாகவே உலவினர்!
எங்குபார்த்தாலும் நீளமான‌முடிக‌ளுட‌ன்,தொள‌தொள‌ கால்ச‌ட்டையை அணிந்துகொண்டு ப‌ஜ‌னை பாடிக்கொண்டு எல்லோரையும் இய‌க்க‌த்தில் சேர்க்க‌ முழுமூச்சாக‌ ஈடுப‌ட்ட‌ன‌ர்.
1976ல் ராபின் ஜியார்ஜ் என்ற‌ வாலிப‌ரை இய‌க்க‌த்தில் சேர‌ச்சொல்லி நிர்ப‌ந்தித்த‌தாக‌ அவ‌ரின் பெற்றோர் அமெரிக்க‌ உச்ச‌நீதிம‌ன்ற‌த்தில் எங்கள் ம‌க‌னை மூளைச்ச‌ல‌வை செய்துவிட்ட‌ன‌ர் இந்த‌ இயக்க‌த்துக்கு எதிராக‌ வ‌ழ‌க்குதொடுத்த‌ன‌ர். இத‌னால் இந்த‌ இய‌க்க‌த்தின‌ருக்கு பின்ன‌டைவும் வ‌ழ‌க்குக‌ளில் சிக்கி அலைந்த‌ன‌ர்.1983-ல் 32மில்லிய‌ன் டால‌ர் ந‌ஷ்ட‌ ஈடு கொடுக்க‌ கோர்ட் உத்திர‌விட‌ அதிர்ந்து போயின‌ர். இத‌னால் இந்த‌ இய‌க்க‌ம் தொய்வ‌டைந்த‌து.
முன்னர் போல ஒவ்வொரு விமான நிலையத்திலும் நின்று பாடுவதும் பணம் சேர்ப்பதும் இல்லை.
ஆனால், பல ந‌க‌ர‌ங்க‌ளில் கோயில்கள் நடத்துகிறார்கள். சைவ உணவை ஏழைகளுக்கும், மாணவர்களுக்கும் அன்னதானம் செய்கின்றனர்.
ஹரே கிருஷ்ணா, ஹரே ராம் இயக்கத்தைச் சேர்ந்த நியூயார்க், அமெரிக்க இந்து துறவியர்கள் முகாம் ஒன்றின் இடைவேளையில்...!
இந்துப் பண்பாட்டில் தான்மட்டும் சளைத்தவள் இல்லை; தன் குழந்தையும் தடம் புரளாது தவழ்ந்து வளர, வாழ வழிகாட்டும் அமெரிக்க இந்துத் தாய்!
ப்ளோரிடாவில் உள்ள அமெரிக்க இந்து மந்திர் துறவியர்கள் இந்து முறைப்படி வேத மந்திரங்களைச் சொல்லி திருமணம் செய்து வைக்கும் அமெரிக்க-இந்து புரோகிதர்
இந்துப் பண்பாட்டில் முழுக்க முழுக்க ஊறித் திளைத்த அமெரிக்க இந்துக் குடும்பம்!
இல்லத்திலேயே இராதைக்குபாலாபிசேகம் செய்து வணங்கும் குடும்பம் இது!


இதோ ஆர்மோனியம் ஜலதரங்கம் சகிதமாக பஜனைபாடி நம் கிராமப்புற பஜனைகோஷ்டியை நினைவில் நிறுத்தும் அமெரிக்கர்கள்
வில்லுப்பாட்டினை வில்லங்கமில்லாமல் பாடுவதையும் பின்பாட்டுக்காரர் ஒத்துப்பாடுவதையும் ரசிக்கும் அமெரிக்க இந்துக் குடும்பங்களும் அமெரிக்க இந்து துறவிகளும்!






கோவர்த்தனா பூஜைக்கு அலங்கரிக்கப்பட்ட பசுவின் சிலை! கோவர்த்தனா பூஜைக்கு பசுவைச் சுத்தம் செய்து பராமரிக்கும் அமெரிக்க‌ இந்து
அமெரிக்காவில் திருவாரூர் தேர்!
பஞ்சகட்சம் ஆண்களுக்கு மட்டுமா? அவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்களா? என்று பெண்களும் பஞ்சகட்சம் கட்டி தேரிழுத்துச் செல்லும் வீதியில் அமெரிக்க‌ கறுப்பினத்தவர்களும் கலந்து வடம் பிடித்து இழுத்துச் செல்லும் காட்சி!
இரத யாத்திரையில் அமர்க்களமாய் ஆட்டம் போடும் துறவி! ஹரே ராம் ஹரே கிருஷ்ணா இயக்கத்தின‌ர் நியூயார்க் ந‌க‌ர‌த் தெருக்க‌ளில் கை ஒலிபெருக்கி மூல‌ம் முழ‌க்க‌ங்க‌ளோடு வேட்டி சேலையில் அமெரிக்க‌ர்க‌ள்!
ஆகம விதிமுறைப்படி கற்ற புரோகிதர்கள் யாக குண்டத்து முன்பு!
இந்து மதத்தின்பால் பிடிப்புள்ள அமெரிக்கர்கள் மெல்ல மெல்ல தங்களை இந்துவாகப் பாவித்து நடைமுறை வாழ்க்கையிலும் தங்களை மாற்றிக்கொண்டு அங்கெங்கெனாதபடி பரவி வருவதோடு ஜெர்மனி, பிரான்சு, இங்கிலாந்து, செக் போன்ற நாடுகளுக்குச் சென்று முகாமிட்டு பிரச்சாரம் செய்வதை வருடாந்திர வழக்கமாகக் கொண்டுள்ளனர். இன்னும் சொல்லப் போனால் இதை தங்கள் வாழ் நாள் கடமையாகக் கருதி இந்துக்களே செய்ய முன்வராததை ஆர்வமாகச் செய்யும் உத்வேகம் இவர்களிடம் ஏராளம் எனலாம்!
7.6 இராமகிருஷ்ணா விவேகனந்தா மையம், நியூயார்க்
அமெரிக்க மக்களிடம் இந்துமத நம்பிக்கை விதைகளைத் தூவி இன்று விருட்சமாய் வளர்ந்தோங்க மூல கர்த்தாவானவர்களுள் கன்னியாகுமரிக் கடலோரப் பாறையில் தவமிருந்த ஓர் இளைஞர் எனும்போது நம் மெய் சிலிர்க்கிறது.
மாதக்கணக்கில் பயணப்பட்டு சொல்லொணாத் துயரங்களுக்கு ஆட்பட்டு வெற்றிகண்டவர். தன்னந்தனியாளாய் பயணப்பட்டு உலகின் ஒரு கோடிக்கு நிலம் காணா கடற்பரப்பில் நீராவிக்கப்பலே கதி என்று கரை கண்ட இடங்களிலெல்லாம் இந்தியாவின் பெருமை, பழமை, இந்து மதத்தின் ஈடு இணையற்ற ஏற்றத்தினை உலகறிய செய்ததில் சுவாமி விவேகானந்தருக்கு மிக முக்கியமான பங்குண்டு. விவேகானந்தர் 1893ல் பாதையாத்திரையாக ராமேஸ்வரம் வந்தபோது ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியை சந்தித்தார். விவேகானந்தரிடம் மிளிர்ந்த புலமை, சாஸ்திர ஞானத்தை கண்டு வியந்த மன்னர்"அமெரிக்கா, சிகாகோ நகரில் நடக்கும் சர்வமத மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற விவேகானந்தரை கேட்டுக்கொண்டார். அதன்படி 1893 மே 31-ல் அமெரிக்கா புறப்பட்டார் விவேகானந்தர்.
7.6.1 சுவாமி விவேகனந்தர்
1893களில் சுவாமி விவேகனந்தர் அமெரிக்கா மும்பையிலிருந்து நீராவிக்கப்பலில் கிளம்பி இலங்கை சென்று அங்கிருந்து மலேசிய தலைநகரான பினாங்கு, சிங்கப்பூர், ஹாங்காங், ஜப்பான், கனடாவின் வான்கூவர் அங்கிருந்து சிகாகோ வந்து நியூயார்க், கலிஃபோர்னியா உட்பட பல மாநிலங்களுக்குச் சென்று வெகு சில தமிழர்கள் உடனிருந்ததிலிருந்து அப்போதே புலம்பெயர்வு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிய இயலும். வரதராவ் என்ற இந்தியர் உயர்ந்த வசதி படைத்த மற்றொருவரை அறிமுகப்படுத்தியதாக அவரின் நண்பர் பாலாஜிக்கு எழுதிய மடலிலிருந்து அறிய இயலுகிறது. விவேகனந்தர் அமெரிக்காவில் சர்வமதமகாசபையில் அமெரிக்க சகோதர, சகோதரிகளே என்று துவங்கி ஆற்றிய உரைகள் பல அமெரிக்கர்களை ஈர்த்தது.
சுவாமி விவேகனந்தர் நண்பர் அளசிங்கருக்கு எழுதிய கடிதத்தில் இப்படிக்குறிப்பிடுகிறார். "இங்கு நான் மேரி மகனின் மக்களிடையே இருக்கிறேன். அந்த ஏசு எனக்கு உதவுவார். இந்துமதத்தின் பரந்தகொள்கைகளும், நாசரேத்தின் தீர்க்கதரிசியிடம் எனக்குள்ள பக்தியும் அவர்களுக்குப் பெரிதும் பிடித்திருக்கின்றன. அந்தமகா புருசருக்கு எதிராக நான் எதையும் போதிக்கப்போவதில்லை என்று நான் அவர்களுக்கு கூறுகிறேன். ஏசுவுடன் இந்திய மகாபுருசர்களையும் போற்றிப்பாராட்டுங்கள் என்றுதான் கிறிஸ்தவர்களை வேண்டுகிறேன். இதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்."
கடல்கடந்து வந்தாலும் அன்னிய தேசத்தில் இந்துக்களல்லாத‌ அவர்களின் விரோதத்தைச் சம்பாதித்துவிடாமல் மிகுந்த எச்சரிக்கையாக இந்துமதப் பண்பாடுகளை எடுத்துச் சொல்லி வெற்றி கண்டவர் சுவாமி விவேகனந்தர்.
எனவே 1890களிலேயே இந்துப்பண்பாட்டை இதமாகத் தூவி அமெரிக்கர்களை ஆலிங்கனம் செய்வதில் முதல்படியை முத்தான படியாக எடுத்து வைத்தவர் என்கிற பெருமை சுவாமி விவேகனந்தரையே சாரும்.


சுவாமி விவேகானந்தர் மேற்கொண்ட‌ பிர‌ச்சார‌ங்க‌ளுக்கு கிடைத்த‌ வெற்றியாக‌ நியூயார்க்கிலிருந்து க‌லிஃபோர்னியா வ‌ரை அமெரிக்க‌ர்க‌ள் இந்துக்க‌ளாக‌ வாழ்க்கை ந‌ட‌த்துவ‌தைக் காண‌முடிகிற‌து.
7.7 பார‌தியா கோவில், பென்சில்வேனியா

பென்சில்வேனியாவில் உள்ள‌ பார‌தியா கோவிலில் அமெரிக்க‌ இந்துக்க‌ளும் இந்திய‌ர்க‌ளும் சாதார‌ண‌மாக‌ச் சென்று வ‌ழிபட்டு வ‌ருவ‌தைப் பார்க்க‌லாம். அமெரிக்க‌ப் பெண் கீதையை வாசிக்கிறார்.
8. அமெரிக்க‌ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ங்க‌ளில்...
இன்றைக்கும் அமெரிக்க‌ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ங்க‌ளில் மாண‌வ‌ர்க‌ள் விரும்பிய‌ ம‌த‌ங்க‌ளைத் தேர்வு செய்து ப‌டிக்கும் அமெரிக்க‌ மாண‌வ‌ர்க‌ளில் இந்தும‌த‌ப் ப‌ண்பாட்டை ப‌யில‌ ஆர்வ‌ம் காட்டி ப‌யிலுகின்ற‌ன‌ர்.
தெற்கு இல்லிநாய்ஸில் உள்ள‌ எட்வ‌ர்ட்வில் ப‌ல்க‌லையில் மாண‌வ‌ர்க‌ள் ஆர்வ‌மாய் இந்தும‌த‌ம் குறித்த‌ வ‌குப்பில்!


மில்கின் ப‌ல்க‌லையில் இந்திய‌ப் பேராசிரிய‌ர் இந்துப்ப‌ண்பாடு குறித்த‌ விள‌க்க‌த்தை செவி ம‌டுக்கும் அமெரிக்க‌ மாண‌வ‌ர்க‌ள் பிராட்லி ப‌ல்க‌லையில்..!

ஆஸ்டின், டெக்சாஸ் ப‌ல்க‌லையில்..!

9. முடிவுரை:- அமெரிக்க நாடாளும‌ன்ற‌, மாநில‌ங்காள‌வைப் பிர‌திநிதி க‌ள‌வையில் சிற‌ப்பு ம‌த‌குரு ஒருவ‌ர் (அர‌சால் நிய‌மிக்கப்ப‌டுப‌வ‌ர்) அவை துவ‌ங்கும் முன் பிரார்த்த‌னை ஒன்றை நிக‌ழ்த்துவார். இது கால‌ம்கால‌மாக‌ ந‌ட‌ந்துவ‌ரும் ஒரு ம‌ர‌பாக‌ பின்ப‌ற்ற‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.

முத‌ன் முறையாக‌ இது க‌ட‌ந்த‌ 2000-ம் ஆண்டில் த‌க‌ர்க்க‌ப்ப‌ட்ட‌து.
2000,செப்டெம்பர் 21-ல் ஒஹையோ மாநிலம் பார்மா என்ற இடத்திலுள்ள சிவா விஷ்ணு இந்துக் கோவில் குருக்கள் வெங்கடாசலபதி சமுல்ட்ராலா அவர்களின் பிரார்த்தனையோடு அமெரிக்க நாடாளுமன்ற கூட்டம், துவங்கியது. மாநிலங்களவைப் பிரதிநிதி ஷெராட் ப்ரவுன் இக் கூட்டத் தொடரின் துவக்கத்தில், "இந்திய‍ அமெரிக்க உறவில் இன்று ஒரு உன்னத நாள். இந்தியாவும் அமெரிக்காவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கலாச்சாரப் பரிமாற்றத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறோம். இந்த அவையின் சிறப்புவாய்ந்த மத குரு அவர்கள் திரு.வெங்கடாஜலபதியை முறைப்படி இங்கு பிரார்த்தனை செய்ய அழைக்கவேண்டுகிறேன். இங்கே நிகழவிருக்கும் பிரார்த்தனை, அமெரிக்காவில் வசிப்போர் பல்வேறு மதங்கள் சார்ந்து இருந்தாலும் ஒற்றுமையோடு இணைந்து இருக்கிறோம் என்பதற்கு அத்தாட்சியாக விளங்கும்!

திரு.வெங்கடாசலபதியின் இன்றைய பிரார்த்தனை நாம் நம் கலாச்சாரத்தில், பாரம்பரியத்தில் வேறுபட்டிருக்கலாம். அதே நேரத்தில் சமாதானம் மற்றும் உரிமைகள் என்ற‌ அடிப்படை உணர்வில் ஒன்றாக இருப்போம் என்பதை பிரதிபலிக்கும் நிகழ்வு" என்றார்.

இத‌ற்கு வெளியிலிருந்து எதிர்ப்புக‌ள் கிள‌ம்பிய‌து; இது என்ன‌ வ‌ழ‌க்க‌த்துக்கு மாறான‌து; ந‌ம் ம‌ர‌புக‌ளுக்கு விரோத‌மான‌து என்றெல்லாம் புகைச்ச‌ல் கிள‌ம்பிய‌து. கிளம்பிய‌வேக‌த்தில் அட‌ங்கியும் போன‌து!

இதிலிருந்து என்ன‌ தெரிகிற‌து? அமெரிக்க‌ ம‌க்க‌ளிட‌ம் மெல்ல‌ இந்தும‌த‌ ந‌ம்பிக்கைக‌ள் ப‌ற்றிப்ப‌ட‌ர்ந்து வ‌ருகிற‌து; இது த‌விற்க‌ இய‌லாத‌து என்ப‌து வெல்ல‌...உண்மை!
வெல்ல‌மாய் இனிக்கும் உண்மை!

அமெரிக்காவில் இந்துக்க‌ள் வ‌ருட‌த்துக்கு வ‌ருட‌ம்
எதோ ஒரு வ‌கையில் அதிக‌ரித்து வ‌ருகின்ற‌ன‌ர்.
அதே வேளையில் இங்கிருக்கும் அமெரிக்க‌ர்க‌ள்
அவ‌ர்க‌ளின் வ‌ழிபாடு, ப‌க்தி, ப‌ண்பாடு இவ‌ற்றை
ஊன்றிக் க‌வ‌னிக்கும் போது அவ‌ர்க‌ளோடு ந‌ட்பு
உற‌வு என்ப‌து நாளடைவில் குடும்ப‌ உற‌வு என்றாகி
பெண் எடுப்ப‌து, கொடுப்ப‌து என்று உற‌வுக‌ள் ம‌ல‌ர்கிற‌து!

இந்திய‌ வ‌மிசாவ‌ளியின‌ரோடு தொட‌ர்புடைய‌ அமெரிக்க‌ர்க‌ள் அவ‌ர்க‌ளோடு திரும‌ண‌ம் செய்து வாழ்கின்ற‌ன‌ர். இதில் குறிப்பாக‌ ஊன்றிக் க‌வ‌னிக்க‌ வேண்டிய‌து ஒன்றும் உண்டு.

அமெரிக்க‌ நாட்டில் உல‌கின் ப‌ல்வேறு நாடுக‌ளில் இருந்து வ‌ந்து வெவ்வேறு க‌லாச்சார‌த்தின‌ர், ம‌த‌த்தின‌ர் கூட்டுக் க‌ல‌வையாக‌ வ‌சிக்கின்ற‌ நாடு! இந்த‌ நாட்டில் வ‌சிக்கும் அமெரிக்க‌ர் ஒரு தாவோ ம‌த‌த்தையோ, சீன‌ ம‌த‌த்தையோ, ஷின்ட்டோ ம‌த‌த்தையோ, ஜூடாயிச‌ ம‌த‌ங்க‌ளைத் த‌ழுவி அவ‌ர்க‌ளோடு இதுபோன்ற‌ ப‌ண்பாட்டு உற‌வையோ, குடும்ப‌ உற‌வையோ ஏன் மேற்கொள்ள‌வில்லை? என்ற‌ கேள்வி எழுந்த‌ வேக‌த்தில் என‌க்கு கிடைத்த‌ ப‌தில் அந்த ம‌த‌ங்க‌ளில் அவ‌ர்க‌ளுக்கு பிடிப்பு ஏற்ப‌ட‌வில்லை; அந்த‌ம‌த‌ங்க‌ளில் அவ‌ர்க‌ளுக்கு ஈர்ப்பு ஏற்ப‌ட‌வில்லை என்ப‌து தெளிவாக‌ப் புரிந்த‌து.

ஆக‌, மாற்று ம‌த‌த் தேட‌லில் ஈடுப‌ட்டோர், அல்ல‌து இந்து ம‌த‌ப் ப‌ண்பாட்டில் ஈர்க்க‌ப்ப‌ட்டோர் அத‌ன் தாக்க‌ங்க‌ளில் த‌ங்க‌ளை இழ‌ந்து இந்துவாக‌ த‌ங்க‌ளை அடையாள‌ப்ப‌டுத்திக் கொண்ட‌வ‌ர்க‌ளாக‌வும் அடையாள‌ப்ப‌டுத்தியும் வ‌ருகிறார்கள் என்ப‌து நான் க‌ண்ட‌றிந்த‌ உண்மை.

எல்லாக் கலாசாரங்களும் ஒன்றாய்த் திரண்டு குழம்பாய்த் தோன்றும் நாடல்ல அமெரிக்கா. மாறாக அது பல இலையமுதினைக் கொண்ட (கிச்சடி) ஒரு கண்ணாடிக் கிண்ணம். அதில் உள்ள ஒவ்வொன்றுக்கும் தனித்தன்மையும் (அடையாளமும்) தகுதித்தரமும் உள்ளது.

ந‌ன்றி,
வ‌ண‌க்க‌ம்.
ஆல்ப‌ர்ட் ஃபெர்னான்டோ,
விஸ்கான்சின், அமெரிக்கா.

ஆதார ஆவணங்கள்:-
1. இந்துப்பண்பாடு சில சிந்தனைகள் - பேராசிரியர் கா.கைலாசநாதக் குருக்கள்
2. உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு ந.சி.கந்தையா.
3. தமிழர் பண்பாடும் அதன் சிறப்பியல்புகளும் தனிநாயகம் அடிகள்
4. சைவ நற்சிந்தனைகள் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
5. சைவம் வளர்த்த சான்றோர்கள் க. சி. குலரத்தினம்
6. http://www.religioustolerance.org/hinduism.htm
7.http://www.census.gov/compendia/statab/2007/population/religion.html

8. http://www.gcts.edu/ockenga/globalchristianity/gd/gd.htm
9. http://www.radhagovinda.net/
10. http://www.himalayanacademy.com/ssc/hawaii/iraivan/tamil_flyer.html
11. http://www.lotus.org/docs/advisory.htm
12. http://swamisatchidananda.org/dignitaries/a861.html
13. http://swamisatchidananda.org/docs2/awards.htm
14. http://www.yogaville.org/
15. http://www.ramakrishna.org/activities/events/memorable.htm

"We believe America is not a melting pot. America is a salad bowl. Each ingredient has its own identity and quality” - Yaaro!